வாழ்வில் எது முக்கியம்?
மனித வாழ்வில் முக முக்கியமான விஷயம் ஒன்றை நாம் எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மனித வாழ்வில் முக முக்கியமான விஷயம் ஒன்றை நாம் எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
'நம்மில் பல திறமைகள் இருக்கின்றன. உடலுழைப்பிலிருந்து கலை வரை; சுவைப்பதிளிருந்து அரிவாள் உணர்வது வரை. மனிதன் ஒரு கலைக்களஞ்சியம்; வற்றாத நீரூற்று!'
பலர் தங்களிடம் உள்ள திறமைகளைத் தட்டி எழுப்பாமலே - வாழ்க்கை வீணையை மீட்டாமலே வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றனர். இதைவிட பரிதாபத்துக்குரிய விஷயம், பலர் தங்களிடம் பல திறமைகள் உண்டு என்று அறியாமலே வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றனர்.
ஆபிரஹாம் மாஸ்லோ என்ற ஒரு மகத்தான மனோதத்துவப் பேராசிரியர் - ஆராய்ச்சியாளர், மனிதன் தன் முழுத் திறமையையும் வெளிக் கொண்டு வருவதுதான் வாழ்க்கை' என்று கூறினார். அந்தக் கொள்கையை நிரூபிக்க பல பெரிய மனிதர்களது, தலைவர்களது வாழ்க்கையையும் ஆராய்ந்தார். அதன் மூலம் Self-Actualization என்ற ஒரு தத்துவத்தை உலகுக்கு அளித்தார். 'மனிதன் தன் முழுத் திறமையையும் செயல் வடிவம் கொடுத்து முழு மனிதனாவது' என்பதுதான் அவர் தத்துவம்.
'வயலின் வாசிக்க எனக்கு வராது' என்று சொல்வதற்குப் பதில்,'இதுவரை வயலினே வாசித்ததில்லை' என்று சொல்லிப்பாருங்கள். ஒரு மனோபாவ மாறுதலை உணர்வீர்கள்! இந்த மனோபாவ மாறுதல் உங்களுக்கு ஒரு வளர்ச்சியைக் கொடுக்கும். எதைப் பற்றி எல்லாம் ஆசைப்படுகிறீர்களோ அதை எல்லாம் முயற்சி செய்யுங்கள்.
தத்துவஞானி எமர்சன் கூறுகிறார்: " ஆசையின் வித்து மனத்தில் முளைக்கும்போது அந்த ஆசையை அடைவதற்கான பூரணத் திறமையும் வாய்ப்பும் அந்த ஜீவனிடம் இருக்கிறது என்று பொருள். அந்தத் திறன், அந்த ஜீவனிடம் இருப்பதால்தான் அந்த ஆசையே முளைக்கிறது" என்று.
வாழ்வில் எல்லாவற்றையும் ரசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்! பூவைப் பார்த்து ரசியுங்கள்! தென்றலைத் தடவிக் கொடுங்கள்! புளியிடமும் சிங்கத்திடமும் பொல்லாத மனிதர்களிடையேயும் உள்ள நல்லவற்றை - அழகைக் கவனியுங்கள்!
மாத்யூ ஆர்னால்ட் என்ற ஆங்கிலேய எழுத்தாளர் 'சுவையும் ஒளியும்' (Sweetness & Light) என்று மிக அற்புதமான ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். அதாவது வாழ்வு பூராவுமே தித்திப்பும், ஒளியுமாக அமைய வேண்டும். அமைத்திக்கொள்ளவேண்டும் என்பதுதான் அவரது நோக்கம் - அவரது வாழ்க்கையின் தாத்பரியம். ஓரிடத்தில் அவர், "மனித இனந்த்தின் பல்வேறு துறைகளையும் வளர்த்து, வாழ்க்கையில் இன்பங் காண வேண்டும். அந்த ஒருமித்த வளர்ச்சி, ஒன்றோடொன்று இசைந்து, ஓர் இசைக்கச்சேரி போல இருக்க வேண்டும்" என்கிறார்.
இந்த அறிவை நாம் எப்படிப் பயன்படுத்தலாம். நான் எழுத்தாளனாகப் போகிறேன் என்று குமாஸ்தா வேலையை விட்டவர்களை எனக்குத் தெரியும். நான் தொழில் செய்யப்போகிறேன் என்று ஆசிரியர் வேலையை உதறியவர்களை நான் அறிவேன். விஞ்ஞான ஆராய்ச்சி மூலம் புதிய கண்டுபிடிப்பைச் செய்து பணம் குவிக்கப்போகிறேன் என்று மாதச் சம்பளம் தரும் வேலையை விட்டவர்களை நான் அறிவேன்.
மாறாக, அருமையாக நிர்வாகத் திறன் கொண்ட என் நண்பர், கல்லூரி ஆசிரியராக நாளை ஒட்டிக் கொண்டிருப்பதையும் நான் அறிவேன். நாம் விரும்பியதை அடைய நமக்குத் துணிச்சல் வேண்டும்; நம் மீது நம்பிக்கை வேண்டும்; கஷ்டங்கள் வரும்போது கலங்காத மனம் வேண்டும்.
அப்படி முடிவெடுக்கும்போது தான் நாம் விரும்பியதை அடைய முடியும்.
உங்கள் கனவு எது வேண்டுமானாலும் இருக்கலாம். புதிய பாதையில் நடக்க அஞ்சாதீர்கள்...! புதிய கதவுகளைத் திறக்க மலைக்காதீர்கள்! புதிய ராகம் என்று ஒன்றுமே இல்லை என்று கூறுவோருக்குச் செவி மடுக்காதீர்கள்!
உங்கள் வாழ்வில் புதிய கீதம் பாட முயலுங்கள்.
கடன் உங்களது பளுவாக இருக்கலாம். கடனிலிருந்து மீள்வேன். அதற்கு இன்ன இன்ன திட்டம் வகுப்பேன்! - என்று வகுங்கள்.
குடும்ப வாழ்க்கை இனிமையுற்று இருக்கலாம். 'என் மனைவியைப் (கணவனைப்) புரிந்து கொள்வேன். புதிய அற்புதமான வாழ்க்கை வாழ்வேன்!' என்று சொல்லிக் கொள்ளுங்கள்.
திருமணம் உங்கள் கவலையாயிருக்கலாம். 'நல்ல அறிவாற்றலும், திறமையுய்ம், அழகுங் கொண்ட ஒரு ஆள் எங்கோ பிறந்திருக்கிறார்' என்று நம்புங்கள்.
அத்தோடு செயல்படுங்கள். திட்டமிடுங்கள். லட்சியத்தை எப்படி அடையலாம் என்று பல்வேறு கோணங்களிலிருந்தும் ஆராயுங்கள்.
"உங்களுக்குப் பிடித்த இடத்தில், பிடித்த வேளையில் இருப்பதாகக் கற்பனை செய்யுங்கள்" என்கிறார்கள் மனசிகிச்சை நிபுணர்கள். அப்படி அடிக்கடி சிந்தித்து - கற்பனை செய்து பழகுங்கள். நம்பிக்கையுடன் நடக்கப் போவதாக எண்ணிச் சிந்தியுங்கள். லவலேசமும் சந்தேகத்தை அங்கெ புகவிடாதீர்கள்! அந்தக் கற்பனை, அந்த ஆசை இருக்கிறதே அதுதான் ஜீவ தாகம், உயிர்த் துடிப்பு. அந்தத் துடிப்பு இப்பிரபஞ்ச சக்தியில் கலந்து உங்களுக்காக இயங்கத் தொடங்குகிறது.
ஆனால் நீங்கள் கற்பனையுடன் நின்றுவிடாமல் அதை அடைய என்ன வழிகள் உள்ளன என்று பாருங்கள். பல வழிகளிலும், 'எது முக்கியம்? எது முக்கியமானதல்ல' என்பதை ஆராயுங்கள். நீங்கள் விரும்பும் முக்கியமான விஷயத்தைப் பின்பற்றுங்கள். ஆங்கிலத்தில் இதை ஒரு சின்னச் சொல்லினால் அழகாகச் சொல்லி இருக்கிறார்கள், Priorities என்று. எது முக்கியம், எது முதலில் செய்யப்பட வேண்டும் என்பது வாழ்வில் மிகமிகக் கவனமாகச் செய்யப்பட வேண்டிய விஷயம்.
குதிரைக்கு முன் வண்டியை நிறுத்தி நாம் குதிரையைக் கொண்டு வண்டியைத் தள்ளச் செய்வதில்லை. வண்டிக்கு முன் குதிரை நின்று இழுத்தால்தான் வேலை எளிதாகும்.
பொதுவாழ்விலும் தனிமனித வாழ்விலும் இதற்கான சில உதாரணங்களைப் பார்ப்போம்.
கிராமத் தன்னிறைவு என்று பலகோடி ரூபாய்க்கான திட்டம் ஒன்று தீட்டி இருக்கிறார்கள் - சாலை, மருத்துவமனை, குடிநீர் என்று. அற்புதமான திட்டம். ஆனால் உடனடியாக அந்தப் பலகோடி ரூபாய்களை மூலதனமாக வைத்து, கிராமத்திற்கு கிராமம் தொழில் பேட்டைகளை நிறுவினால் பணம் புரளும்; வருமானம் வரும்; வேலைவாய்ப்புக் கிடைக்கும். போட்ட மூலதனம் பெருகும். அதிலிருந்து குடிநீர், சாலை எல்லாம் அமைக்கலாம். நிரந்தரமான செல்வம் பெருகும். ஏழைக்கு கிராமத்தில் வீட்டைக் கட்டிக் கொடுத்து விட்டால் அவன் வயிற்றுக்கு என்ன செய்வான்? ஒரு மனிதனிடம் ஒருநாள் உணவுக்கான மீனைக் கொடுப்பதா? அல்லது வாழ்நாள் பூராவும் பயன்தரும் மீன்பிடிப்புத் தொழிலைக் கற்றுத் தருவது நல்லதா? பாருங்கள், எப்படிக் குதிரைக்கு முன் வணியைக் கொண்டு நிறுத்தி இருக்கிறோம் என்று!
தனிமனித வாழ்வுக்கு வாருங்கள்.
ஒரு பெண் அழகுடனும் பணத்துடனும் மருமகளாக வரவேண்டுமென்று எண்ணிப் பெண் பார்க்கிறார்கள் அல்லது மாப்பிள்ளை பார்க்கிறார்கள். வாழ்க்கையை வாழ குணங்கள் தேவை; நல்ல குணங்கள் தேவை.
பணத்துடனும் அழகுடனும், வீட்டில் அடங்காப் பிடாரியை வைத்துக்கொள்ள முடியுமா? அல்லது ஒரு தறுதலைக்கு மாலை சூட்ட முடியுமா? முடிவெடுக்கும் போது எது முக்கியம் என்று கருதாமல் வாழ்க்கை பூராவுமே மனிதர்கள் அல்லல் படுகிறார்கள். வாழ்க்கை சுமையாகிறது. அவல வாழ்க்கை நடத்துகிறார்கள்.
அடுத்தமுறை பிரச்னை வரும்போது 'எது முக்கியம்' என்று கொஞ்சம் ஆராயுங்கள்.
*என் கருத்து : வாழ்வில் எது முக்கியம்? எவற்றுக்கெல்லாம் நாம் முதன்மை தரவேண்டுமென்று சொல்லியிருக்கின்றார். எல்லாரது வாழ்க்கையிலும், எப்படிப்பட்டவராகிலும் சரி, செய்ய வேண்டிய செயல்களுக்கு கொடுக்கப்படுகின்ற முன்னுரிமையைப்பொறுத்தே வெற்றி பெறுகிறார்கள். திட்டமிடாத வாழ்க்கை திறம்பட அமையாது. பத்து கி.மீ பயணம் என்றாலும் திட்டமிடுகிறோம். எங்கு செல்கிறோம், எதற்காகச் செல்கிறோம், எத்தனை மணிக்குள் செல்வோம், எப்போது வீடு திரும்புவோம் என்றெல்லாம். அப்படியிருக்க வாழ்க்கை என்று வரும்போது திட்டமிடலும், அதற்கான முதன்மை தரலும் மிக அவசியம். திரு.உதயமூர்த்தி அவர்களின் வாசகங்களுள் மிக முக்கியமானவற்றை கோடிட நினைத்தேன். ஆனால், அனைத்துமே மிக மிக முக்கியமான வாசகங்களே. திரு.உதயமூர்த்தி அவர்களின் மற்ற புத்தகங்களையும் வாங்கி படித்து வாழ்வில் வெற்றி பெறுங்கள்.